275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும்

இஸ்லாத்தை ஏற்பவர்கள் "வணக்கத்திற்குரியன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை" என்று உறுதி கூறினால் மட்டும் போதாது, "முஹம்மது அல்லாஹ்வின் தூதர்" என்றும் உறுதி கூற வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்பவர்கள், நபிகள் நாயகத்திடம் வந்து "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான்" என்று உறுதி கூறி வந்தனர். அந்த அடிப்படையில் நயவஞ்சகர்களும் மற்றவர்கள் கூறுவது போல் "நீங்கள் அல்லாஹ்வின் தூதரே" என்று கூறினர்.

இவ்வாறு கூறியது அவர்களின் உள்ளத்திலிருந்து வராததால் அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

இதை ஆதாரமாகக் கொண்டு, "லாயிலாஹ இல்லல்லாஹ் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சொல்வது நயவஞ்சகர்களின் பண்பு" என்று சிலர் கூறுகின்றர். இது அறிவீனமாகும்.

ஏனெனில், நபிகள் நாயகத்தை அல்லாஹ்வின் தூதர் என்று கூறியதை இங்கு தவறு என்று இறைவன் அறிவிக்கவில்லை; தமது உள்ளத்தில் இல்லாத ஒன்றை வாயால் கூறியதைத் தான் அல்லாஹ் கண்டிக்கின்றான்.

இவர்கள் அல்லாஹ்வை நம்பினோம் என்று வாயால் கூறினார்கள். ஆனால் உண்மையில் அல்லாஹ்வை நம்பவில்லை. அதே போல நபிகள் நாயகம் (ஸல்) விஷயத்திலும் பொய்யையே சொல்கிறார்கள் என்பதற்காக அவர்களை இவ்வசனத்தில் கண்டிக்கிறான்.

நபிகள் நாயகத்தை அல்லாஹ்வின் தூதர் என்று உறுதி மொழி கொடுப்பது நபிகள் நாயகத்தின் காலத்தில் வழக்கத்தில் இருந்தது என்றும், அந்த வழக்கத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றும் அந்த உறுதி மொழி உளப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் இவ்வசனம் (63:1) தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.